சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு; 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்……

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல் முறையாக 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 238 வாக்குச் சாவடிகளில் 5 மணியுடன் நிறைவடைந்தது. 20 வாக்கு சாவடிகளில் மட்டும் ஐந்து மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு 7 மணிக்கு பிறகும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய ஆவணத்தை வைத்திருந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட நிலையில், உடனடியாக மாற்று எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு தொய்வின்றி நடைபெற்றது. இறுதியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 77. 68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக 75 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் 84 ஆயிரத்து 195 ஆண் வாக்காளர்களும், 92 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 17பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 74 வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்போடு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ராணி மேரி கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *