காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழர்களின், விவசாயிகளின் நீண்ட நெடிய தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி! – கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி

 

காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்த காவிரி நடுவர்மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தின் சார்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக அதனை அமைக்காமல் இழுத்தடித்து வந்தது.

இதனிடையே காவிரி நடுவர்மன்ற நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெங்களூர் நகர குடிநீர் தேவையை குறிப்பிட்டு தமிழகத்திற்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சி அளவாக குறைத்தது. எனினும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டது தமிழகத்திற்கு ஓரளவு ஆறுதலான விசயமாக இருந்தது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என கர்நாடகம் தெரிவித்தது. தொடர்ந்து அங்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பும் வெளியானது. இதையடுத்து மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தல் அரசியலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் கேட்டதோடு கர்நாடக தேர்தல் முடியும் வரை வாய்தா மேல் வாய்தாவாக வழக்கை இழுத்தடித்து சென்றது.

இதனிடையே தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த செயல்திட்டமானது உச்ச நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட திட்டத்திற்கு மாற்றமாகவும், மீண்டும் கர்நாடகாவுக்கு சாதகமான அம்சங்களும் இருப்பதாக கூறி திருத்தங்களை கொண்டுவர தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டன. இதையடுத்து அந்த வரைவு திட்டத்தில் மாற்றங்களை செய்து இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அந்த வரைவு செயல் திட்டத்தில் மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னர் தாக்கல் செய்த வரைவு அறிக்கையில் இந்த ஆணையத்துக்கு மேற்பார்வையிடும் அதிகாரம் மட்டுமே அளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே மேலாண்மை ஆணையத்துக்கு நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றத்தை கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பருவ காலத்திற்கு முன்னதாக வரைவு செயல் திட்டத்தை செயல்படுத்தவும், பருவமழை தொடங்கும் முன்பு அரசிதழில் வெளியிடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தமிழர்களின், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் கொடுத்த அழுத்தமும், தமிழக அரசின் சட்டப்போராட்டமுமே முக்கிய காரணமாகும். இந்த தொடர் போராட்டங்கள் இல்லாமல் காவிரி விவகாரத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. ஆனால், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகமிழைத்து வந்த பாஜக, காவிரி போராட்டங்களால் எந்த பிரயோஜனும் இல்லை என்பது போலவும், மத்திய அரசுதான் காவிரி ஆணையத்தை அமைத்தது எனவும் கூறிவருவது கேலிக்கூத்தானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *