காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை….

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 41 ஆயிரத்து 067 கனஅடி நீரும், கபினி அணைக்கு 30 ஆயிரம் கனஅடி நீரும் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, 82 ஆயிரத்து 285 கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 15வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியைக் கடந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கென வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது கூடுதல் நீர் திறக்கப்படும் என்பதால் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளாகச் சம்பா, குறுவை, தாளடி என மூன்று பருவங்களிலும் நெல் பயிரிட முடியாமல் போன நிலையில், இப்போது அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பது விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இப்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள 12லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *