எப்போதும் இல்லாத வகையில், எளிதாக வணிகம் செய்யும் இடமாக இந்தியா மாறியிருக்கிறது ; டெல்லியில் நடைபெற்ற பன்னாட்டு உணவு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

முன்னெப்போதும் இல்லாத வகையில், எளிதாக வணிகம் செய்ய கூடிய இடமாக இந்தியா மாறியிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள விஞ்யான் பவனில், உலக உணவு இந்தியா 2017 என்ற தலைப்பில், மூன்று நாள் பன்னாட்டு உணவு மாநாடு தொடங்கியுள்ளது. இதனை துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குளிர்பான உற்பத்தியாளர்கள் தங்கள் குளிர்பானங்களில், 5 சதவிகித அளவிற்கு பழச்சாறுகளை கலந்து விற்பனை செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றார். வேளாண் துறையில் முதலீடு செய்ய தனியார் துறையினர் அதிகளவில் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார். அதிலும் குறிப்பாக, ஒப்பந்த பண்ணை சாகுபடி, விதை உள்ளிட்ட மூலப்பொருட்கள், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவற்றில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்தார். உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு, நமது வீடுகளில் நொதித்தல் என்ற எளிய நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஊறுகாய், இஞ்சிமொரப்பா, அப்பளம், தொக்குகள், சட்னிகள் ஆகியவை மிகச்சிறந்த உதாரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், உலகளவில் இந்தியா ஆறாவது பெரிய நாடாக விளங்குவதாகவும், இந்தியா இனிப்பு புரட்சி செய்வதற்கான காலம் கனிந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், அண்மையில் வெளியான உலக வங்கியின் அறிக்கையை மேற்கொள்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னெப்போதும் இல்லாத வகையில், எளிதாக வணிகம் செய்யும் நாடாக இந்தியா மாறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *