உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரும், செயலாளரும் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக்கூறி திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. அப்போது, செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும், நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக்கூறி, திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். மாநில தேர்தல் ஆணையர் மாலிக் ஃபெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு, மாநில தேர்தல் ஆணையரும், செயலாளரும் ஆஜராகினர். அப்போது, அரசு மற்றும் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை தள்ளிவைக்க கோரினார். இதையடுத்து, வழக்கு வரும் 14-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *