உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்குவதற்கு முன் வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். உடன் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்றன. 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

8 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான கார் பரிசை அலங்காநல்லூர் அஜய் தட்டிச் சென்றார். மேலும் சிறப்பாக காளையை பராமரித்த மதுரையை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவரங்காடு பொன்னர்சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 400 பேர் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும் தங்க்க் காசுகள் வெள்ளி காசுகள் , ரொக்க பணம், சைக்கிள், பீரோ, கட்டில், மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவரை மாடு முட்டியதில் அவர் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்மாடிபட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது, இதில் 400 மாடுபிடி வீர்ர்களும், 450 காளைகளும் பங்கேற்றன. மருத்துவக்குழு, தீயணைப்புதுறையினர் தயாராக இருந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல் பகுதியிலும் இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது, மைதானத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் துரத்திச் சென்றனர். அப்போது சில காளைகள் பார்வையாளர்கள் பக்கம் சீறிப் பாய்ந்த்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *