இன்று முதல் அமலுக்கு வருகிறது குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம்… எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ;

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட அரசு பேருந்துகளின் கட்டணங்களை சிறிதளவு குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரசு பேருந்துகளின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது .இதனால் பேருந்துகளை மட்டுமே நம்பியிருந்த நடுத்தர மற்றும் ஏழை மக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட அரசு பேருந்துகளின் கட்டணங்களை சிறிதளவு குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பேருந்துக் கட்டணங்களைக் குறைத்துள்ளதாகவும் இந்தக் கட்டணக் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புறப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 4 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 4 ரூபாயாகவும் அதிகப்பட்சக் கட்டணம் 22ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மாநகர நகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 4ரூபாயாகவும் அதிகப்பட்சக் கட்டணம் 18ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புறநகரில் சாதாரணப் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 60 காசுகளாக உள்ள கட்டணம் 58 காசுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 காசுகளில் இருந்து 75காசுகளாகவும், சொகுசு பேருந்துகளில் 90காசுகளில் இருந்து 85காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு பேருந்துகளில் 110 காசுகளில் இருந்து 100காசுகளாகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் 140காசுகளில் இருந்து 130 காசுகளாகவும் கிலோமீட்டருக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாளொன்றுக்கு போக்குவரத்து கழகத்துக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களின் விருப்பத்திற்கேற்ப பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *