இன்று தாக்கலாகிறது பா.ஜ.க.அரசின் கடைசி பட்ஜெட்; விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என எதிர்பார்ப்பு…

2018 – 19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பா.ஜ.க.வின் கடைசி பட்ஜெட் என்பதால் புதிய சலுகைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில், 2018 – 19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2 புள்ளி 5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரெயில்வே கட்டணம் உயருமா என்ற கேள்வி அடித்தட்டு மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *