ஆர்.கே.நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்; திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில்….

ஆர்.கே.நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானதால் இந்த முறை தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் ஆர்கே நகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி திமுகவினர் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த புகாரையடுத்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் கைது செய்தனர். இதனிடையே பணப்பட்டுவாடா செய்வதை தட்டிகேட்டவர்களையும், தவறுதலாக கைது செய்து விட்டதாகவும், பணப்பட்டுவாடாவை தடுக்க கோரியும் திமுகவினர், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு தினகரன்மீது புகார் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.கே.நகரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் நடைபெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது டிடிவி தினகரனை அவர்கள் கடுமையாக தாக்கி பேசினர்.

இதே போன்று ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதேபோல் பாஜக மாநில தலைவர் தமிழிசையும் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் கொருக்குப்பேட்டை எழில்நகரில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *