அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ; குறைந்தபட்சம் 15 ஆயிரத்து 700 ரூபாயும், அதிகபட்சம் இரண்டே கால் லட்சமும் கிடைக்கும்

தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 15 ஆயிரத்து 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு, 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, டெங்கு பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம் ஆறாயிரத்து 100 ரூபாயிலிருந்து, 15 ஆயிரத்து 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஊதிய உயர்வு 1.10.2017 முதல் பணப்பயனுடன்அமல்படுத்த ஆணையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஊதியக்குழுக்களால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகள் உயர்த்தப்பட்டதை விட இம்முறை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல், குறைந்த பட்ச ஓய்வூதியம் ஏழாயிரத்து 850 ரூபாய் என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 என்றும், குடும்ப ஓய்வூதியம் 67 ஆயிரத்து 500 என்றும் உயர்த்தி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம் 3 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 11 ஆயிரத்து 100 ரூபாயாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அலுவலக உதவியாளரின் ஊதியம் தற்போது வழங்கப்படும் 21 ஆயிரத்து 792 ரூபாயில் இருந்து 26 ஆயிரத்து 720 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரத்து 928 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. இளநிலை உதவியாளரின் ஊதியம் தற்போது வழங்கப்படும் 37 ஆயிரத்து 936 ரூபாயில் இருந்து 47 ஆயிரத்து 485 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கு 9 ஆயிரத்து 549 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தற்போது வழங்கப்படும் 40 ஆயிரத்து 650 ரூபாயில் இருந்து 50 ஆயிரத்து 740 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 90 ரூபாய் கூடுதலாக பெறுவார்கள். ஆய்வாளர்களின் ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வரும் 69 ஆயிரத்து 184 ரூபாயில் இருந்து 84 ஆயிரத்து 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆய்வாளர்கள் 15 ஆயிரத்து 716 ரூபாய் கூடுதலாக பெறுவார்கள்.

துணை ஆட்சியர்களின் ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வரும் 81 ஆயிரத்து 190 ரூபாயில் இருந்து, 98 ஆயிரத்து 945 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் துணை ஆட்சியர்கள் 17 ஆயிரத்து 755 ரூபாய் கூடுதலாக பெற முடியும். சத்துணவு அமைப்பாளர்களின் ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வரும் 10 ஆயிரத்து 810ல் இருந்து 13 ஆயிரத்து 720 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் 2 ஆயிரத்து 910 ரூபாயினை கூடுதலாக பெறுவார்கள்.

சத்துணவு சமையலரின் ஊதியம் தற்போது வழங்கப்படும் 6 ஆயிரத்து 562ல் இருந்து 8 ஆயிரத்து 80 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்துணவு சமையலர்கள் 2 ஆயிரத்து 118 ரூபாயை கூடுதலாக பெற முடியும்.

அரசின் செலவைக் குறைக்கும் வகையில், பல்வேறு துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களைக் கண்டறியவும், இதரப்பணியிடங்களில் வெளிமுகமை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கென பணியாளர் சீரமைப்புக் குழு உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

======

ஊதிய உயர்வு பட்டியல்

* அலுவலக உதவியாளரின் ஊதியம் – ரூ.21,792 – ரூ.26,720

* இதன் மூலம் ரூ.4,928 கூடுதலாக வழங்கப்படுகிறது

* இளநிலை உதவியாளரின் ஊதியம் – ரூ.37,936 – ரூ.47,485

* இதன் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கு ரூ.9,549 கூடுதலாக வழங்கப்படுகிறது

* இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் – ரூ.40,650 – ரூ.50,740

* இதன் மூலம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.10,090

* ஆய்வாளர்களின் ஊதியம் – ரூ.69,184 – ரூ.84,900

* இதன் மூலம் ஆய்வாளர்கள் ரூ.15,716 கூடுதலாக பெறுவார்கள்

* துணை ஆட்சியர்களின் ஊதியம் – ரூ. 81,190 – ரூ.98,945

* இதன் மூலம் துணை ஆட்சியர்கள் ரூ.17,755 கூடுதலாக பெற முடியும்

* சத்துணவு அமைப்பாளர்களின் ஊதியம் – ரூ.10,810 – ரூ.13,720

* இதன் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ரூ.2,910 கூடுதலாக பெறுவார்கள்

* சத்துணவு சமையலரின் ஊதியம் – ரூ.6,562 – ரூ.8,080

* இதன் மூலம் சத்துணவு சமையலர்கள் ரூ.2,118 கூடுதலாக பெற முடியும்

=======

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *