அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அதிமுகவின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் நேற்று கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கட்சியின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், பார்த்திபன், ரெங்கசாமி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.உயர்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர், மாயாஜாலம், தந்திரம் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார். கட்சியில் துரோகம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை தீவிரமாகும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்றும், மாயமானை நம்பி பின்னே சென்றவர்களுக்கு ராமாயணத்தில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

6 மாவட்ட செயலாளர்களை பொறுப்பில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஆர்கே நகரில் இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து வாக்குகளைப் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *