அக்டோபர் மாதம் 2ம் தேதி அமலாகிறது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு;

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி, மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளில் அமலாக உள்ளது.

10 கோடி ஏழைக்குடும்பங்கள், தலா 5 லட்ச ரூபாய் வரையில், உயர் மருத்துவ சிகிச்சை பெற உதவும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஏழை-எளிய குடும்பங்கள், சாதாரண சிகிச்சை முதல் உயர் சிகிச்சை வரையில் பெற இத்திட்டம் உதவும் என்றார். மாநில அரசு மருத்துவமனைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். மருத்துவக் காப்பீட்டு முறையை மாதிரியாக கொண்டிருப்பதால், சிகிச்சை பெறும் ஏழை குடும்பத்தினர் பணத்தை செலுத்த தேவையில்லை என்றும் கூறினார். இந்த திட்டத்திற்கான வரையறைகளை நிதி ஆயோக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கலந்தாலோசித்து இறுதி செய்து வருவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவ காப்பீட்டின் அடிப்படையிலான திட்டம் என்பதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரத்து 100 ரூபாயை பிரீமியமாக செலுத்தவும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆண்டொன்றிற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தாண்டு காந்தி ஜெயந்தியன்று தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் அமலுக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *