12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் காரணமாக 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என்று ஊகங்கள் எழுந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பிசிசிஐ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றதாகவும், மார்ச் 23 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகுப்பு முகமைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.