ராமநாதபுரம் உத்தரகோசமங்கை கோவிலில் மரகத சிலையை கடத்த முயற்சி – IG பொன்மாணிக்கவேல் நேரில் விசாரணை

ராமநாதபுரம் உத்தரகோசமங்கை கோவிலில் மரகத சிலையை கடத்த முயற்சி – IG பொன்மாணிக்கவேல் நேரில் விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சிலையைக் கடத்த முயன்றவர்களை இன்னும் 2வாரங்களில் பிடித்து விடுவோம் எனச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோவிலில்  மரகதத்தால் ஆன மங்கள நடராஜர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்திரா தரிசன நாளன்று சந்தனக்காப்பு நடைபெறும். அன்று மட்டும் பக்தர்கள் மரகத நடராஜர் சிலையைக் கண்டு வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி இரவு தலையில் துண்டால் மறைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கோவிலின் காவலர் செல்லமுத்தைக் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து அபாயச்சங்கை ஒலிக்கச் செய்தார். அபாயச்சங்கு ஒலித்ததால் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கோவிலில் உள்ள விலைமதிப்பு மிக்க மரகத நடராஜர் சிலையைக் கொள்ளையடிக்க முயன்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், இராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் இன்று உத்தரகோசமங்கை கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்மாணிக்கவேல், விசாரணைக்குக் காவல்துறையினர் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துவருவதாகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை இன்னும் 2வாரங்களில் பிடித்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *