பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு ஜி20 நாடுகள் அடைக்கலம் தரக்கூடாது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு ஜி20 நாடுகள் அடைக்கலம் தரக்கூடாது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிறநாடுகளில் இருந்து தப்பிஓடி வரும் பொருளாதாரக் குற்றவாளிகள் நுழைவதை தடுக்கவும், அவர்களை தேடப்படும் நாடுகளிடம் ஒப்படைக்கவும் புதிய முறையை ஜி20 நாடுகள் கூட்டாக ஏற்படுத்த வலியுறுத்தி ஒன்பது அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், ஜி20 உச்சி மாநாடின் இரண்டாவது அமர்வு, சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரிமுறைகள் குறித்த அமர்வாக நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, பொருளாதாரக் குற்றவாளிகளை கையாளும் விவகாரத்தில், வலுவான, துடிப்பான ஒத்துழைப்பை ஜி20 நாடுகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக 9 அம்ச செயல்திட்டம் ஒன்றையும் அவர் முன்வைத்தார்.

பொருளாதாரக் குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொருளியல் ஆதாயங்களை முடக்குவது, அவற்றை உரிய நாட்டிடம் ஒப்படைப்பது, பொருளாதாரக் குற்றவாளிகளை தேடப்படும் நாட்டிற்கு விரைவாக நாடு கடத்துவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரக் குற்றவாளிகள் தப்பி வரும்போது அவர்களை அனுமதிப்பதையோ அடைக்கலம் தருவதையோ தவிர்க்கும் வகையில், ஜி20 நாடுகள் கூட்டாக ஒருமுறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசங் கடந்த குற்றங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக ஐ.நா. வகுத்துள்ள கோட்பாடுகள் முறையாகவும் முழுமையாகவும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.

அரசுகளுக்கு இடையே விரிவாகவும் விரைந்தும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் வகையில், சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த பொறுப்பு, 37 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஃபைனான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்சிடம்  வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *