அறிவித்தபடி 4ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதலமைச்சரின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் ஜெயக்குமார், நிதித்துறைச் செயலர் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து, இன்று சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்ற அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்து, டிசம்பர் 5ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒருங்கிணைப்பாளர்களிடம் சென்ற உறுப்பினர்கள் சிலர், தங்களிடம் கேட்காமல் வேலைநிறுத்தம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சில நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, சலசலப்பு ஓய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *