பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக உள்ள நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு மே இரண்டாம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அவற்றிற்கான ஆன்லைன் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று இரவு 12 மணியுடன் நிறைவடையும் நிலையில், சுமார் 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
வருகிற ஜூன் 20ம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதுவரை விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது…