நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் வெளியாகும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் வெளியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபத்தை பராமரிக்க அரசு சார்பில் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையாக பராமரிக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், மணிமண்டப வளாகத்தில் குப்பைகள் பரவிக்கிடக்கின்றன. புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தை பராமரிக்க கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தை பராமரிப்பது, பொதுப்பணித்துறையா அல்லது ஆதிதிராவிடர் நலத்துறையா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்றார்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை குறைத்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், குறைக்கப்பட்ட தொகையை மீண்டும் உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

பள்ளிகளில் யோகா பாடத்தை கட்டாயமாக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் வெளியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் காஞ்சிபுரம் மண்டல செயலாளர் விடுதலைச்செழியன், சென்னை மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா,செல்வம், அன்புச்செழியன், ஆதவன், அம்பேத்வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *