சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் மாநில சுயாட்சி மாநாடு ; கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாடு தேசிய அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மத்திய அரசின் அதிகாரக்குவிப்பை தகர்த்திடவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார்.

பின்னர் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனையும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார்.

இதேபோல்,சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனையும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி , கட்சியின் மூத்தத் தலைவர் இரா.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா ஆகியோரையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார்.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவை வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், மாநில சுயாட்சி மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *