சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில், எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஜனநாயக அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார். முதலமைச்சருக்கு தன் மீதான நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே ஆளுநரிடம் பரிந்துரை செய்தால் சட்டப்பேரவையை கூட்டுவார்கள் என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அப்படி சட்டப்பேரவையை கூட்டினால் நிச்சயமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.