அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே. சசிகலா நீக்கம் ; கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது பொதுக்குழு….

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலாவை நீக்கி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் வழப்பட்டுள்ளது.

அ.தி.மு.க அம்மா அணி மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 296  பேரும், பொதுக்குழுவில் 2,140 பேரும், பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்துடன் ஓரணியில் போட்டியிடவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அவரவர் பதவிகளில் நீடிப்பார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மணிமண்டபம் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. தெரிவிப்பது,வர்தா புயல் பாதிப்பின் போது மீட்புப் பணிகளையும், வறட்சியின்போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக அரசை காப்பாற்றி சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பை ரத்து செய்வது, இந்த தீர்மானத்தின் மூலம் வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பதவிநீக்கப்பட்டு, அவரது நியமனங்கள் ரத்து செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் கட்டுக்கோப்பை  சீர்குலைக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது என்றும் தொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி ஏற்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றும் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சென்னையில் நடைபெற்றது பொதுக்குழு அல்ல என்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டதாகவும் டிடிவி.தினகரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *