நான் என்ன பாவம் செய்தேன்? கண்ணீர் விட்டு அழுத குமாரசாமி

கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் குமாரசாமி, ” நான் என்ன பாவம் செய்தேன். ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்?’’  என்று கூறி கண் கலங்கினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த.) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. முதல்வராக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி பதவியேற்ற பின், ரூ. 34,000 கோடி மதிப்புள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர் பிரிவின் சார்பில் முதல்வர் குமாரசாமி, மஜத அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் குமாரசாமி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் குமாரசாமி பேசுகையில், மங்களூருவில் போராட்டம் நடத்திய சில பெண்கள் தங்களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கூறி கோஷமிட்டது தனது மனதை புண்படுத்திவிட்டதாக கூறினார். மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை எனக் கூறி உணர்ச்சிவசப்பட்ட அவர், கண் கலங்கினார்.

பின்னர் கண்களை துடைத்தவாறு பேசிய குமாரசாமி, “நான் என்ன பாவம் செய்தேன். பதவியேற்று  2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தும் எனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *