தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் ; நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தின் புதிய நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசைய்யா, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதையடுத்து, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனால், வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்து வந்தார். தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியிறுத்தி வந்தன. இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த இவர், தற்போது தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 77 வயதான பன்வாரிலால் புரோஹித், 3 முறை நாக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர் தனிக்கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்த பன்வாரிலால், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் ஓராண்டுக்குப் பிறகு முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாது பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பீகார் மாநில ஆளுநராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில ஆளுனராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில ஆளுனராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர், மத்திய அரசின் கைப்பாவையாக இருக்காமல், அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *