புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் உயிரைப் பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடுவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் : முதலமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் உயிரைப் பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடுவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டையில் புயலால் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதாக தெரிவித்தார். கனமழை பெய்த காரணத்தால் நாகை, திருவாரூர் பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் செல்லமுடியவில்லை என்றும், அங்கு மீண்டும் பார்வையிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு சேதமடைந்துள்ளது என்பதைகணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அதன்அடிப்படையில் நாளை மறுநாள் பிரதமரை சந்திக்கும் போது நிவாரண நிதி கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

கஜா புயலால் 40 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். புயல் நிவாரணப் பணிகளில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் ஊழியர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிவாரணப் பணிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இயல்பு நிலை திரும்பும் வரை மீட்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *