இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில் செயல்படும் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவியருக்கு தலா 4 சீருடை, பாட புத்தகம், புத்தகப்பை ஒரு ஜோடி காலணிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

ஜுன் மாதம் முதல் மாநிலம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், முன்கூட்டியே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வி அளிப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மேற்கொள்கின்றன. செயல்முறை விளக்கத்துடன் கூடிய மாண்டோசரி கல்வி முறை பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது.

எல்கேஜி, யுகேஜியில் சேர 52 ஆயிரத்து 993 குழந்தைகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே அங்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *