அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி பெயர்..!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, திருமதி காந்தி, மற்றும் வருங்கால பிரதமராகப் போகும் இத்தாலியப் பெண்ணின் மகன் என குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிகமுக்கிய வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட்  ஹெலிகாப்டர் ஊழல் எனக் குறிப்பிடப்படும் இந்த முறைகேட்டில் பிரிட்டிஷ் குடிமகனான கிறிஸ்டியன் மைக்கேல் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7 நாள் அமலாக்கத்துறை காவல் முடிந்தைத் தொடர்ந்து, கிறிஸ்டின் மைக்கேல், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது “திருமதி காந்தி” மற்றும் “அடுத்த பிரதமராகப் போகும் இத்தாலியப் பெண்ணின் மகன்” என்று மைக்கேல் கிறிஸ்டியன் கூறியதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. திருமதி காந்தியின் பெயரை மைக்கேல் கிறிஸ்டியன் கூறியதாகவும், ஆனால் எதைத் தொடர்புபடுத்தி அந்த பெயரைக் கூறினார் என தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியது.

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் இருந்து ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் எப்படி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒப்பந்தம் டாடாவுக்கு வழங்கப்பட்டது குறித்தும் கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தின்போது “ஆர்” எனக் குறிப்பிடப்பட்ட பெரிய மனிதர் யார் என்பதை கண்டறிய வேண்டியிருப்பதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மைக்கேல் கிறிஸ்டியன் தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்கப்பட்டபோது கைகுலுக்கியதாகவும், அப்போது ஒரு துண்டுச்சீட்டு கைமாறியதாகவும், அதில் சோனியா காந்தி தொடர்பான கேள்விகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, கிறிஸ்டியன் மைக்கேலை வழக்கறிஞர் அணுகுவதை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது.

மேலும் 8 நாள் காவலில் மைக்கேலை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கேட்ட நிலையில், 7 நாட்களுக்கு விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் கிறிஸ்டியன் மைக்கேலை வழக்கறிஞர் அணுகுவதற்கான நேரத்தை 15 நிமிடங்களாக குறைத்த நீதிமன்றம், வழக்கறிஞர் உரிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *