பாரதிராஜாவிற்கு கைது பயம் இல்லையா?: உயர்நீதிமன்றம் கேள்வி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார். இது தொடர்பான புகாரில் பாரதிராஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமின் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக, நீதிபதி ராஜமாணிக்கம் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்லமுடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா என்றும், நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக தாக்கல் செய்ததும் தவறு என்பதையும் நீதிபதி  சுட்டிக்காட்டினார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது பாரதிராஜா தரப்பில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு அவகாசம் கோரிதான் மனுத்தாக்கல் செய்துள்ளோம், வேண்டுமானால் அபராதத்துடன் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *