40 வருடங்கள் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு கணவர் செய்த மரியாதை..!

திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைவதற்குள் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிக்கட்டுக்களை மிதித்து வரும் தம்பதியினருக்கு மத்தியில், திருமணம் முடிந்து 40 ஆண்டுகள் வாழ்க்கைத் துணையாக பயணித்து மறைந்த, தனது இல்லத்தரசிக்கு சிலைவைத்து வழிபாடு நடத்தி வருகிறார் மளிகை கடைக்காரர் ஒருவர்..! அவரது மனைவி பக்தி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கடல் அலை ஓய்ந்தாலும் ஓயும்…! கணவன் மனைவி சண்டை ஓயாது..! என்பதுதான் நம்மில் பலர் கண்ட காட்சியாக உள்ளது..! சரியான புரிதல் இல்லாமல் திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே மனக்கசப்பு ஏற்பட்டு நீதிமன்றத்தை நாடி விவாகரத்துக்காக காத்திருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம் ..! ஆனால் மளிகைக் கடைக்காரர் ஒருவர் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து இறந்துபோன மனைவிக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆசைத்தம்பி. தனது மாமன் மகள் பெரியபிராட்டியை கடந்த 1977 ஆம் ஆண்டு திருமணம் செய்த ஆசைத்தம்பி, செங்கல்பட்டு அடுத்த தென்பாதி கிராமத்தில் குடியேறினார். மளிகைக்கடை வைத்து வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு, மனைவி பெரிய பிராட்டி உறுதுணையாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கேபிள் தொழிலில் கால் பதிக்கவும் அதன் மூலம் வருவாயை உயர்த்தவும், மனைவி பெரிய பிராட்டி ஊக்கம் கொடுத்ததால் வாழ்க்கையில் வசதியான நிலையை அடைந்ததாக கூறுகிறார் ஆசைத்தம்பி.

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு புற்றுநோயால் பெரியபிராட்டி இறந்துவிட கடுமையான மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆசைத்தம்பி..! அவரது நினைவாகவே இருந்த ஆசைத்தம்பி, தனது மனைவியின் 5 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட சிலையை மாமல்லபுரத்தில் இருந்து செதுக்கி வாங்கி வந்துள்ளார். தனது வாழ்வின் பாதியாக வாழ்ந்து மறைந்த மனைவி பெரிய பிராட்டிக்கு சிலை அமைத்ததோடு, சிலைக்கு தாலி கட்டி அவர் நினைவுகளுடன் மீதம் உள்ள வாழ்க்கையை பக்தியுடன் வாழ்ந்து வருகிறார்..!

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் தனது மனைவியின் சொல்லே மந்திரம் என சிலைக்கு பூஜை செய்து அவர் நினைவாகவே வாழ்ந்து உயிரைவிட வேண்டும் என்பதே தனது ஆவல் என்கிறார் ஆசைத்தம்பி..!

மனைவி உயிரோடு இருக்கும் போதே, வேறு பெண்களை தேடிச்செல்லும் ஆண்களுக்கு முன்னுதாரணமாக, தனது கரம் பிடித்த மனையாள் இறந்த பின்னரும் அவருக்கு சிலைவைத்து மரியாதை செய்திருக்கிறார் இந்த மளிகை கடைக்காரர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *