வி.கே.சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் சோதனை ; சென்னையில் ஜாஸ் சினிமா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு

வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில், வருவமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் 3-வது நாளாக சோதனை நடத்தவுள்ளனர். நேற்றைய சோதனையில், டி.டி.வி தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் 7 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மற்றும் வரிஏய்ப்பு புகார்கள் காரணமாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் மொத்தம் 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிக்கை அலுவலகம், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவனின் வீடு, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரிடம் பணியாற்றிய பாண்டியனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி வீடு, நீலகிரி மாவட்டம் கோடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்கறிஞர் செந்திலின் நண்பர் பால சுப்ரமணியனின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இது தவிர புதுச்சேரி ஸ்ரீலட்சுமி நகைக்கடை, தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, டி.டி.வி தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் 7 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள், சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று சோதனை நடத்தப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *