தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களை உரிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசென்று, நிவாரண முகாம்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கிடவும் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உடனடியாக தக்க நிவாரணம் கிடைத்திட தமிழ்நாடு அரசுஅனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்தில் பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.