பயனாளர்களின் தகவல்களை திருட நடைபெற்ற முயற்சி குறித்து பேஸ்புக்கிடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு

பயனாளர்களின் தகவல்களை திருட நடைபெற்ற முயற்சி குறித்து பேஸ்புக்கிடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு

தகவல்களை திருடும் நோக்கத்துடன், 5 கோடிக்கும் அதிகமான பயனாளர்களின் கணக்குகளை ஹேக் செய்ய நடைபெற்ற முயற்சி குறித்து, ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

5 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்கர்கள் களவாட முயற்சித்ததாக கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அந்நிறுவன சிஇஓ ஷெரில் சாண்ட்பர்க்  ஆகியோரின் கணக்குகளும் இதற்கு தப்பவில்லை.

உலகளவில் அதிக கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்திய பயனாளர்களின் விவரங்களும் திருடப்பட்டிருக்கலாம் என்றும், இது மிகவும் ஆழமான பாதிப்புள்ள பிரச்சனையாக இருக்கக்கூடும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, ஃபேஸ்புக்கிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் அணலிட்டிகா நிறுவனத்தால் ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்கள் முறைகேடாக அணுகப்பட்டது தொடர்பாக, பூர்வாங்க சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்டில் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.