தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வந்தது மத்திய மருத்துவ குழு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார குழு இன்று சென்னை வந்தது. இந்த குழுவினர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது. போர்க்கால அடிப்படையில் உரிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ் பிள்ளை தெருவை சேர்ந்த, கல்லூரி மாணவி மதுமதி, டெங்கு காய்ச்சலுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து, காய்ச்சல் அதிகமானதால், மதுமதி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த விஜய் என்பவரது 4 வயது மகன் பாரதி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 நாட்களாக, மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பாரதி பரிதாபமாக உயிரிழந்தான். (Mail)

சேலம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவின் 8 வயது மகள் கீர்த்தி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு உரிய சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சிறுமி கீர்த்தி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்த, 7 வயது சிறுவன் ஹரிஹரன், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் உள்ள O.A. காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் அமராவதிக்கு 2 வார காலமாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காய்ச்சலுக்கு அமராவதி காரைக்குடி மானகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அருகேவுள்ள காராப்பாடியை சேர்ந்த துரைசாமியின் 5 வயது மகள் ரச்சனா டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்தாள். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரச்சனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து 5 மருத்துவர்களை கொண்ட வல்லுநர் குழு இன்று சென்னை வந்தது. எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான மருத்துவக்குழுவில், குழந்தை நல மருத்துவர் சுவாதிதுப்லிஸ், கவுல்ஷால் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்கிறது. இதனைத்தொடர்ந்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் மத்திய குழு, ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *