சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்….

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானிலை அப்படியே மாறியது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்ய தொடங்கிய கனமழை, மாலையில் மழை தீவிரம் காட்ட தொடங்கியது. சென்னையில், வளசரவாக்கம், சிட்லபாக்கம், கீழ்பாக்கம், குரோம்பேட்டை, மாம்பாக்கம், வண்டலூர், கே.கே. நகர், ஆவடி, பாடி, மதுரவாயல், அசோக்நகர், அரும்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் அசோக்நகர், கோட்டூர்புரம், பாடி, கோயம்பேடு, காந்தி மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவல்லிகேணி, எழும்பூர், பட்டினப்பாக்கத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கத்திபாரா, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, சென்னை சென்ட்ரல், கீழ்பாக்கம், மவுண்ட்-பூவிருந்தவல்லி சாலை, ஓஎம்ஆர், அடையாறு எம்.ஜி. சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான சுரங்கப்பாதைகள் வெள்ளநீரால் மூழ்கியுள்ளது. கனமழை காரணமாக, மின்சார ரயில்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாமதமாக சென்றன. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *