சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் ஒரு தரப்பினர் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 3-வது நாளாக செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில், செவிலியர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்கள் 90 சதவீத கோரிக்கைகைளை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற கோரி செவிலியர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, புதன்கிழமை பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், செவிலியர்கள் இதுவரை விடுப்பு எடுத்ததற்கான முறையான விளக்கம் அளிக்கவும், அவ்வாறு விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொது சுகாதாரத்துறை செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், செவிலியர்களின் போராட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.