குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் – எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை

நேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமை போராளியும் நாடுகளிடையே அமைதி ஏற்படப் பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
சமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக விளங்கியவர் குல்தீப் நய்யார். தனது எழுத்தாற்றலை பணம் அல்லது புகழ் பெறும் நோக்கத்தில் பயன்படுத்தாமல் அநீதியைத் தட்டி கேட்கவும், நியாயத்தை எடுத்துரைக்கவும், உரிமைகளை மீட்கவும் பயன்படுத்திய ஒரு ஊடக மாவீரனாக விளங்கியவர் குல்தீப் நய்யார். அவசரக் கால நிலையின் போது அரசுக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்த்து நின்று அதன் விளைவாக மிசா சட்டத்தில் சிறைக்கும் சென்றவர் குல்தீப் நய்யார்.
மாலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, சம்யுக்தா விரைவு தொடர் வண்டிக் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரித்து உண்மை குற்றவாளிகளை அடையாளப்படுத்திய பயங்கரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த நிகழ்வு குறித்து உண்மைகளை வெளிப்படுத்தத் துணிச்சலாக குரல் கொடுத்தவர் குல்தீப் நய்யார்.
பிரிட்டனுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றிய குல்தீப் நய்யார் அண்டை நாடுகளுடன் நட்புகளை வளர்த்துக் கொள்ள அரும்பாடு பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய அச்சு மற்றும் மின் ஊடகங்களின் போக்கு குறித்து பெரிதும் வருந்தினார். ஊடகங்களைப் பணிய வைப்பதற்கு அவசரக் கால நிலையில் இருந்ததைப் போல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுப்பதற்கு வழி வகுக்காமல் இன்றைய ஊடகங்கள் அரசுக்குச் சாதகமாகவே இயங்கி வருகின்றன என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதை ஊடகவியலாளர்கள் இத்தருணத்தில் சுயபரிசோதனை செய்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.
குல்தீப் நய்யார் அவர்களின் இழப்பு இந்திய ஊடகத் துறைக்கு பெரும் பேரிழப்பு. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *