கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.108 நாட்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அவர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு விடுவிக்கப்பட்டார்.

கடத்தல் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடத்தல் தொடர்பாக வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்தனகவுடாமல்லு உள்ளிட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது.

வீரப்பன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ரமேஸ் என்பவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். 18 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இவ்வழக்கு விசாரணையின் போது, கடத்தப்பட்ட ராஜ்குமார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மணி அறிவித்திருந்தார்.

இதையடுத்து கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி உள்ளிட்ட 9 பேரும் கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 11 மணியளவில் நீதிபதி மணி வழக்கின் தீர்ப்பை வழங்கினார். அதில் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லாததாலும், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *