ஒகி புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவின் ஆய்வு நிறைவு; 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்…

ஒக்கி புயல் மற்றும் பருவமழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு டெல்லி திரும்பியது.

கடந்த நவம்பா் மாதம் சென்னை, கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஓகி புயல் தாக்கியது. இதில் ஏராளமான உயிச்சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இதனைத் தொடா்ந்து ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து புயல் தொடா்பான பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினா் தமிழகம் வந்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஒரு குழு பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டது.

மற்றொரு குழுவினர், திருப்பதி சாரம், சுசீந்திரம், வடக்கு தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் ஆவரந்தலை, ஏர்வாடி, திருக்குறுங்குடி பகுதிகளில் ஒக்கி புயலால் சேதமடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்தது.

இரண்டு நாட்கள் ஆய்வை நிறைவு செய்தபின் மத்தியக் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்தியக் குழுவினர், டெல்லி திரும்பினர். இதனை தொடர்ந்து ஒக்கி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் அந்த குழு தாக்கல் செய்கிறது.

இதனிடையே ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்தால் ஏக்கருக்கு 29 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *