இளைஞனை பிடித்து கம்பத்தில் தள்ளி போலீசார் ஆவேசம்

சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்து போலீசாருக்கும், இளைஞனுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இளைஞனை பிடித்து கம்பத்தில் தள்ளி போலீசார் மிகவும் ஆவேசாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

சீருடையில் பெண் போலீஸ் மது அருந்தும் காட்சி, தான் டி.ஜி.பி. ஒருவரின் பெண் என காவலரை மிரட்டும் காட்சி என காவல்துறை சார்ந்த சர்ச்சை வீடியோக்கள் தினந்தோறும் வெளி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவும் ஒரு வீடியோ காட்சி தான் இது. இதில் ஒரு இளைஞனை போக்குவரத்து போலீசார் கம்பத்தில் வைத்து கையை உடைக்க முயல்வது போலவும், முறுக்குவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் தியாகராய நகர் சென்றுள்ளார். போத்தீஸ் பாயிண்ட் பகுதியில் பிரகாசை மறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், இந்துமதி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் ஹெல்மெட் அணியாதது குறித்தும், மூன்று பேராக வந்தது குறித்தும் கேள்வி எழுப்பியதுடன் அபராதம் விதித்துள்ளனர். அப்போது தம்முடைய குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வருவது என்ன தவறு எனக் கேட்டு, போலீசாரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் பிரகாஷ். இவரின் செய்கையை போலீசாரும் செல்போனில் படம்பிடித்தனர்.

அப்போது போக்குவரத்து போலீசார் கையில் இருந்த செல்போனை பிரகாஷ் பறித்துள்ளார். செல்போனை வாங்குவதற்காக அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலாட்டாவில் பிரகாஷின் தாயை போக்குவரத்து போலீசார் தள்ளி விடும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

தாயை தள்ளி விட்டதால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், போலீசாரை தாக்க பாய்ந்ததுடன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனின் சட்டை பட்டையை பிடித்துக் கொண்டு முரண்டு பிடித்துள்ளார். நல்லி சில்க்ஸ் அருகே உள்ள கம்பத்தில் வைத்து பிரகாசை மடக்கிய போலீசார், கையை விடுவிக்க போராடியுள்ளனர்.

இந்தக் காட்சிகள் தான் இளைஞனின் கையை உடைக்க முயல்வது போன்று வெளியாகி வைரலாகும் காட்சிகள் என போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். தாங்கள் கையை முறிக்கவில்லை என்றும், பிரகாசிடம் இருந்து விடுபட போராடியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே போலீசாரால் தாக்கப்பட்டதாக பிரகாசின் தாயார் கூறும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதனிடையே பிரகாசை கைது செய்த மாம்பலம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து போலீசாரிடமும் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *