தொடரும் உயிர் பலி! தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்! – எம்.எச்.ஜவாஹிருல்லா

நீட் தேர்வு:தொடரும் உயிர் பலி! தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் அதில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாமல் திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டு தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த தற்கொலை சம்பவங்கள் மனவேதனையை அளிக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும்  எதிர்க்கட்சிகள் பலகட்ட போராட்டத்தில் இறங்கியதில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசு காலம் தாழ்த்திய நிலையில் தற்போது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கமுடியாது என மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த நீட் தேர்வு என்பது அனைவருக்கும் சமமான தேர்வு என்று கூறும் மத்திய பாஜக அரசு உண்மையிலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் மருத்துவர்களாக உருவாவதை தடுக்கப்படுவதற்காகவே இந்த நீட் தேர்வு பயன்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் சுமார் 83000 பேர் தேர்வாகி உள்ள நிலையில் முன்னேறிய சமூகத்தினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடும், தேசிய அளவில் 49.5 விழுக்காடும் இருக்கும் நிலையில் வெறும் 12 விழுக்காடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

பாஜகவிடம் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்திற்கு இத்தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தர அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் சுயாட்சி என்ற அடிப்படையில் இதுபோன்ற தேர்வுகளை ரத்து செய்து, அந்தந்த மாநில அரசுகளே இத்தேர்வுகள் தொடர்பான முடிவுகளை எடுத்துக்கொள்ள அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்

மேலும், இத்தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள் யாரும் விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்குச் செல்லக் கூடாது, ஏனெனில் “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப உடலில் உயிரும், ஆரோக்கியமும் இருந்தால் தான் நம் எந்த பணியையும் செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ, அதனை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அடைய முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *