லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை – உயர்நீதிமன்றம்

நாடு முழுவதும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளது என்றும், லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தாலுகா அலுவலகங்களிலும், அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தாரர் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

2016ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால் உடனடி நடவடிக்கை எடுத்ததாக ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல என குறிப்பிட்டார். எனவே, இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நாடு முழுவதும் புற்று நோய் போல பரவியுள்ள ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளது என்றார். தாலுகா அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அப்படிப்பட்டவர்கள், தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் கண்மூடி வேடிக்கை பார்ப்பதை விடுத்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு, குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *