நெல்லை அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, 3 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது 3 வயது மகள் தனிஷ்கா மற்றும் உறவினர்களான முருகன், நிரஞ்சன்குமார், மகேஷ், ஆகியோருடன் உறவினர் ஒருவரின் திருமண விருந்திற்காக ஆலங்குளத்தை அடுத்த அடைக்கலப்பட்டினத்திற்கு இறைச்சி வாங்க காரில் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. கார் கரும்புலியூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்காசியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் லாரிக்கு அடியில் சென்று நொறுங்கியதில் காரில் இருந்த அனைவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  லாரிக்கு அடியில் இருந்து காரை மீட்ட போலீசார், அப்பளம் போல் நொறுங்கிச் சிதைந்த காரின் பாகங்களை கடப்பாறை உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அகற்றி உடல்களை மீட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *