தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த விலையேற்றத்தை ஏற்க முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் 10 சதவீத கேளிக்கை வரி விதிப்புப் பிரச்னை காரணமாக நேற்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 15 ரூபாய் என்றும் அதிகபட்சக் கட்டணம் 150 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 120 ரூபாயாக உள்ள டிக்கெட் விலை 150 ரூபாயாகவும், 95 ரூபாயாக உள்ள டிக்கெட் விலை 119 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. 85 ரூபாயாக உள்ள டிக்கெட் விலை 107 ரூபாயாகவும், .10 ரூபாயாக உள்ள டிக்கெட் விலை 15-ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி, தற்போது உள்ள கட்டணத்தில் 25 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.