கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனைமரம் ஏறிய நபர் தலைகீழாகத் தொங்கிய நிலையில் இருக்க, ஜேசிபி கொண்டு மரத்தை உலுக்கி கீழே இறக்கினர். அதிக உயர ஏணி தங்கள் வசம் இல்லாததால்தான் இவ்வாறு கீழே இறக்க நேரிட்டதாக ஊத்தங்கரை தீயணைப்புத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் காப்பு பட்டையுடன் பதநீர் சேகரிக்க இன்று காலை மரம் ஏறியுள்ளார். பதநீர் சேகரிக்க சென்றவர் மேலிருந்தவாறே திடீர் என தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்த கிராமமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சாமல்பட்டி போலீசாரின் மேற்பார்வையில், அவர் விழக்கூடும் என ஒரு இடத்தை அனுமானித்து, அங்கு மட்டும் வலை கட்டிய அவர்கள், மரத்தின் மீது ஏறாமல் ஜேசிபியின் கை போன்ற பகுதியைக் கொண்டு பனை மரத்தில் மோதி மோதி, உலுக்கி கீழே இறக்க முயற்சித்தனர். இதில் மேலே தலைகீழாகத் தொங்கியவரின் உடல் மரத்தின் மீது வேகமாக மோதியது.
ஒரு கட்டத்தில் கணேசனின் உடல், காப்புப் பட்டை உதவியுடன் சரசரவென கீழே இறங்கி, வலை கட்டப்படாத மறுபுறத்தில் வந்திறங்கியது. பின் தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர். அவருக்கு ஊர்மக்கள் முதலுதவி செய்தனர். பின், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் ஏற்கெனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பின் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சாமல் பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மரத்தின் மீது தீயணைப்புத்துறை வீரர்கள் ஏறியிருந்தால், எடை தாங்காமல் ஏறியவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அதிக உயரம் கொண்ட ஏணி ஊத்தங்கரை அல்லது அருகிலுள்ள போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையங்களின் வசம் இல்லை எனவும் தீயணைப்புத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.