‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகியுள்ளார். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லண்டன்,
2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3–ந் தேதி 4–வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே ஏற்கனவே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், மூத்த மந்திரி பதவி விலகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.