புல்வாமா தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள தமது அலுவலகத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், தாக்குதலில் 50 பேரை இந்தியா இழந்திருப்பதாக கூறினார். இதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மிகவும் வலுவான ஏதோ ஒன்றைச் செய்ய இந்தியா ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அவர், இருநாடுகள் இடையேயான உறவில், மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக சுட்டிக் காட்டினார். இதை தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும், இதில் தாங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்காததால், அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இதனிடையே நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் நாட்டுத் தூதரகத்தின் முன்பு திரண்டு இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி, புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியினர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.