ரபேல் விவகாரம் தொடர்பாக, எல்கேஜி படிக்கும் குழந்தைபோல் ராகுல்காந்தி பேசுகிறார் – மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி

ரபேல் விவகாரம் தொடர்பாக, எல்கேஜி படிக்கும் குழந்தைபோல் ராகுல்காந்தி பேசுகிறார் – மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி

ரபேல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். எல்கேஜி படிக்கும் குழந்தைபோல் ராகுல்காந்தி பேசுவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மக்களவையில் இன்று இரண்டாவது முறையாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது ஏன்? என்று தாம் ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை என கூறினார்.

ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்க காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு ஒரு விமானத்தின் விலை ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்தது ஏன்? என்றும் வினவினார். தற்போது வரை ரஃபேல் விமானம் இந்தியாவிற்கு வராததற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

போர் விமான தயாரிப்பில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள, பொதுத்துறை நிறுவனமான HALஐ தவிர்த்துவிட்டு, நிறுவனம் தொடங்கிய 10 நாட்களில்6, அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன்? என்றும் ராகுல் காந்தி வினவினார். பிரதமர் மோடியை பாதுகாப்பதற்காக, அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுவது, பெரும் சோகமான நிகழ்வு என்றார். அப்போது, தாம் ஒரு ஆடியோ ஒன்றை வைத்திருப்பதாகவும், அதை ஒலிபரப்ப அனுமதி கிடைக்குமா என ராகுல் காந்தி தெரிவித்தார்.

உடனடியாக எழுந்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ராகுல் வெளியிடும் தவறான, பொய்யான தகவல்களுக்கு எப்படி விளக்கம் அளிக்க முடியும்? என்றும் ஜேட்லி கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆடியோவை ஒலிபரப்ப அனுமதி இல்லை என்றவுடன், ஆடியோவின் எழுத்து நடையை ராகுல் வாசிக்க தொடங்கினார். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் ஆட்சேபம் தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை பெரும் அமளியில் மூழ்கியதால், 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவை கூடியபோது, அனில் அம்பானி பெயரை குறிப்பிட்டு பேசக் கூடாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, அனில் அம்பானி பெயரின் முதல் தொடக்க எழுத்துக்களான AAவை, டபுள் A என ராகுல் காந்தி குறிப்பிட்டு, உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ரபேலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், சில மனிதர்கள், இயற்கையாகவே உண்மையை விரும்புவதில்லை என்று ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி சொல்லும் ஆடியோ பதிவு, சித்தரிக்கப்பட்டது என கோவா முதலமைச்சரும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் மறுத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர், தனி ஒருவராக இறுதி செய்ததாக ராகுல் காந்தி கூறுவது, எல்கேஜி குழந்தை எதையாவது புரிந்துகொண்டு மழலை மொழியில் பேசுவது போல் உள்ளதாக அருண்ஜேட்லி விமர்சித்தார்.

ஜேம்ஸ்பாண்டு படத்தில் வருவதுபோல், மாயாஜாலம் நிகழ்த்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக அருண்ஜேட்லி கூறியபோது, அதிமுக எம்பிக்களின் அமளிக்கு இடையே, மக்களவையில் சிரிப்பலை எழுந்தது…

ராகுல்காந்தி குடும்பத்தினர் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட அருண்ஜேட்லி, மீண்டும், மீண்டும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, பொய்யான தகவல்களை காங்கிரஸ் வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *