சென்னை ஐ.ஐ.டி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் திரு.சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.

சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அப்புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெற்றோரிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

மாணவி தற்கொலை குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயலாகும். காவல்துறையினரின் இந்த அராஜகப்போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய மோசமான பாகுபாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இதுவரை எந்தவிதமான முறையான விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறை இதுகுறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் இனிமேல் இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *