BSNL முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சென்னை CBI நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது.

அதற்கு எதிரான சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானவை என்று தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டபட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி  வாசித்தார். இந்த குற்றச்சாட்டுகளை அனைவரும் மறுத்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *