சென்னையில் இன்று நடைபெற உள்ள கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தேசியக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
தெற்கில் உதித்த சூரியன் என்ற தலைப்பில், இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்துகின்றனர். முன்னதாக கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார்.
இதை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரமாண்ட மேடை, மிக முக்கியப் பிரமுகர்களுக்கான இருக்கை அமைப்புகள் கார் பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் வர இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிரடிப்படை போலீசார், கமாண்டோ படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படவுள்ளனர்.