தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நாளை நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தேமுதிகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையப் போவதாக பேச்சு எழுந்தது. எனினும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை தேமுதிக வெளியிடவில்லை.
தேமுதிக எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். கூட்டணி கட்சித் தலைவர் களுடன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். எனவே நாளை கூட்டணி குறித்த முடிவை தேமுதிக இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.